பளார்.
சடக்கென்று திரும்பி பார்த்தேன்.
அடிபட்டது அமன். நானல்ல.
அடிபட்டது அவன். வலி எனக்கு.
அமன் இடது கையால் தனது இடது கன்னத்தையும் காதையும் தேய்த்துக்கொண்டிருந்தான்.
நிதின் ரத்தோர் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தான் ஹிந்தியில்.
அமன் புத்தனாக அமைதி காத்தான்.
நான் காரை விட்டு வெளியே வந்து, "ஸ்டாப் இட்" கத்தினேன்.
நிதின் திரும்பி பார்த்தான். "ஒன்லி ஒன், சார்! நோ மோர்!" என்றான் அந்த மஹாராஷ்ட்ரியன். இள ரத்தம். சூடானது.
ஒரு லாரி டிரைவர் அடிபடுவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்னதான் தப்பு அவன்மேல் இருந்தாலும்.
ஏன் நிதின் அமனை அடித்தான்?
மதியம் மூன்று மணி. சாப்பிட்டு, பாண் (paan) போட்டு கொண்டு முந்திரா நோக்கி பயணம். இன்னோவா வண்டி.
![]() |
| Author flanked by Driver Nitin Rathor (on his right) and Cogoport Deepank Varshney |
டிரைவர் நிதின் ரத்தோர். அணிக்கெட் டிரைவர் நம்பர் இரண்டு. கோகோபோர்ட் அலுவலர் தீபாங்க வருஷனே.பிளஸ் நான்.
"அஞ்சறை மணிக்கு நாம் முந்திரா போயிடுவோம் இல்லை?" கேட்டேன் நான். சுமார் 150 கிலோமீட்டர் பாக்கி.
கட்டாயம் சார், என்றான் நிதின். டில்லியில் இருந்து கிளம்பி ஒரு வாரம் ஆகி விட்டது. பயணம் முடியும் கட்டம்.
பிரிட்ஜ் மேலே ஏறினால் பாலன்பூர் போகலாம். ஏறாமல் நேராக போனால், முந்திரா.
அங்கேதான் விதி விளையாடியது.
திடீரென்று ஒரு டாடா லாரி எங்கள் இன்னோவா மீது மோதியது. 60 கிம் வேகத்தில். இன்னோவாவின் வலது பக்க இண்டிகேட்டர் விளக்கு கழன்று கீழே விழுந்தது. பம்பர் உடைந்து அதுவும் கீழே விழுந்தது.
இந்தியா நியூஸிலாந்து T20 கிரிக்கெட் மேட்சை (26 January 2020) ஆப்பிள் மேக் ஏர்லே பார்த்துக்கொண்டு இருந்த தீபாங்க பக்கவாட்டில் தள்ளப்பட்டான். நல்ல வேளை, ஆப்பிள் மேக் ஏர் உடையாமல் தப்பித்தது. நானும் தள்ளப்பட்டேன். கொஞ்சம் ஷாக்.
அப்போதுதான் நிதின் இன்னோவாவை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி, லாரி டிரைவர் அமனை லாரியில் இருந்து கீழே இறக்கி, பளார் என்று அறைந்தான்.
இவை எல்லாம் வேகமாக நடந்து விட்டது.
"ஏன் அடித்தேன் தெரியுமா?" கேட்டான் நிதின் அமனிடம் ஹிந்தியில்.
'நீ ஏன் வண்டியை சேதப்படுத்தியத்துக்கு அல்ல. நீ மொபில் போனில் பேசியபடியே வண்டி ஒட்டியதற்கு."
கீழே இறங்கிய அமன் ஒத்துக்கொண்டான் அவன் மொபில் போனில் பேசிக்கொண்டது பற்றி.
அப்படி பேசும்போது திடிரென்று ஒரு பெரிய பள்ளத்தை பார்த்து அதை தவிர்க்க லாரியை இடது பக்கம் திருப்பி இருக்கான்.
அவனுடைய லாரிக்கு இடது பக்கம் போய்க்கொண்டிருந்த எங்கள் இன்னோவாவை அவன் பார்க்க முடியவில்லை. Blindspot. இடித்து விட்டான்.
அணிக்கெட் தோராயமாக 40,000 ரூபாய் ரிப்பேர் செலவு என்று கணித்தான்.
அமன் பணத்துக்கு ஏற்பாடு செய்யும்வரை நிதின் லாரியை விடுவதாக இல்லை.
அமன் அவனுடைய மும்பையில் உள்ள வண்டி சொந்தக்காரரிடம் பேசினான். அவர் 2,000 ரூபாய் கொடுக்க தயார். அதுக்கு மேலே ஒரு பைசா, நோ சான்ஸ்.
நிதின் கோபப்பட்டான். வண்டி சொந்தக்காரருக்கு வாட்ஸாப்ப் வீடியோ மூலம், இன்னோவா சேதத்தை காண்பித்தான்.
இப்போது,5,000 ரூபாய் தர தயார்.
நிதின்: 15,000 ரூபாய் கேட்டான்.
ஒனர்: 7,000 ரூபாய்.
நிதின்: 9,000. டேக் இட் ஆர் லீவ் இட்.
ஒனர்: டிரைவர்ஐ போலீஸ் ஸ்டேஷன் கூட்டிகிட்டு போங்க. டோன்ட் கேர்.
ஆஹா. என்ன பிரமாதமான முதலாளி? கொடுத்து வச்ருக்கணும் அமன்.
அமன் உத்தர பிரதேச சுல்தான்பூர் சேர்ந்தவன். இதுதான் அவனுடைய முதல் ட்ரிப். சம்பளம்: 4,000 ரூபாய். மாசம்.
மும்பையில் இருந்து காலி லாரியை காந்திதாம் கொண்டு போகிறான் லோடுக்காக. வழியில் இந்த விபத்து.
வாட்சை பார்த்தேன். 5.45. சுமார் 2 மணி நேரம் இங்கேயேதான்.
கடைசியில், ஒனர் 9,000 ரூபாய் ஒத்துக்கொண்டார். ஆனால் ஒரு கண்டிஷன். 7,000 ஆன்லைன் பெமென்ட். மிச்சம், காந்திதாம் சேர்ந்தபிறகு, அமன் ஏற்பாடு செய்வான்.
அப்பாடா...
நிதின் லாரியில் அமனுடன். அணிக்கெட் இன்னோவா டிரைவர்.
காந்திதாம் அடைந்தோம். ஆனாலும் பிரச்சினை முடியவில்லை.
அமன் 1,000 ரூபாய் கொண்டுவந்தான். அதற்கு மேல் ஏற்பாடு செய்யமுடியவில்லை.
நிதின் மீண்டும் எரிமலை ஆனான்.
"வாதா தியா ஹை. நிபாவ் . (சொன்ன சொல்லை நிறைவேற்று)
ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. நிறைய லாரி டிரைவர்கள் அமனை ஆதரித்து பேச்சு. சின்ன பையன். முதல் ட்ரிப். காருண்யம் காட்டு.
நிதின் பிடிவாதம். 9,000.
மீண்டும் ஒனர்கூட போனில் பேச்சு வார்த்தை.
நிதின் விடாக்கொண்டன்.
மீண்டும் அமன் எங்கோயோ போனான்.திரும்பினான் மிச்ச பணத்துடன்.
எங்கள் முந்திரா பயணம் தொடர்ந்தது.
டிரைவர் அடிபடுவது ஒரு விஷயம். முதலாளி அணுகுமுறை இனொரு பாடம்.
இந்த 9,000 ரூபாயை எப்படி அமன் திருப்பி கொடுக்க போகிறான் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
நல்ல வேளை, ஒரே ஒரு அறையுடன் அமன் தப்பித்து விட்டான்.
முதலாளி இரக்கமில்லாதவரா? புரியவில்லை.
இன்னும் ஒரு விஷயம். அந்த பாலன்பூர் கிராஸ்ஸிங்கில் பல லாரிகள் கடந்து சென்றது. ஒரு வண்டியும் நிறுத்தி அமனுக்கு உதவ முன்வர வில்லை.
டிரைவர் ஒற்றுமையாவது மண்ணாங்கட்டியாவது!
கோபம் கோபமாக வந்தது. எனக்கு கோபம் வந்து என்ன பிரயோசனம்? பல்லை கடித்துக்கொண்டேன்.



Comments
Post a Comment